விவசாயிகளின் தோழனாக மாறிய தொழிலதிபர்!- `மனுநீதி மாணிக்கம் அத்தப்ப கவுண்டர்

படிச்சி முடிச்சதுக்கப்புறம் அமெரிக்கா போகாதே. உன்னைய படிக்க வெச்ச நாட்டுக்கு ஏதாவது நல்லது செய்'னு அப்பா சொன்னது என் மனசுல எப்பவுமே இருக்கு. அதனாலதான், விமானத் துறையிலயும், ராணுவத் துறையிலயும் என்னால முடிஞ்ச பங்களிப்ப செலுத்தியிருக்கேன். நம்ம நாட்டோட தொழில்நுட்பங்களை அமெரிக்காவுக்கும், ஜெர்மனிக்கும் கொண்டுபோனேன். ஆனா, விவசாயிங்களுக்கு ஏதாவது செய்யணும். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கணும். மாணவர்கள் நல்லா படிக்க ஏதாவது செய்யனும் தோணிக்கிட்டே இருக்கும்" என்று தனது பாதை மாறியதை விவரிக்கத் தொடங்கினார் மாணிக்கம் அத்தப்ப கவுண்டர். "ஜெர்மனியில நாங்க ஃபேக்டரி அமைச்சோம். ஆனா, நாஜி கட்சிக்காரங்களுக்கு அது பிடிக்கலை. 'இந்தியர்கள் எங்க நண்பர்கள்தான். ஆனா, இங்க வந்து நீங்க தொழில் செய்யாதீங்க'னு சொன்னாங்க. என் கண் முன்னாடி ஒரு அமெரிக்க ஃபேக்டரிக்கு தீ வெச்சாங்க. அதனால, 11 மாசத்துலேயே அங்கிருந்து கிளம்பிட்டோம். அப்புறம்தான் அமெரிக்காவுல உற்பத்தி யூனிட் தொடங்கினோம். 2001 செப்டம்பர் 11-ம் தேதி இரட்டைக் கோபுர தாக்குதலுக்கு அப்புறம், எங்க இயந்திரங்களை விக்கறதுல பிரச்சினை இருந்துச்சி. அதனால், 4, 5 வருஷம் அங்கேயே தங்கி, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூருக்கு எங்க இயந்திரங்களை வித்தோம். அதுக்கப்புறம் இந்தியா வந்துட்டேன்.ராணுவத்துக்குத் தேவையான ஒரு எக்யூப்மென்ட் டெவலப் செஞ்சோம். அது அதிக சப்தம் எழுப்பும் என்பதால், கே.பரமத்தி பக்கத்துல 130 ஏக்கர் நிலம் வாங்கி, அங்க பேக்டரி கட்ட முயன்றோம். ஆனா, அங்க தண்ணிய டெஸ்ட் பண்ணப்ப, சாயத் தண்ணினு தெரிஞ்சது. அதுக்கப்புறம், பக்கத்துலயே 64 ஏக்கர் நிலம் வாங்கி, ஆராய்ச்சியைத் தொடர்ந்தோம்.

சாயக்கழிவால் பாதிப்பு ஒரு நாள், அந்தப் பகுதியை சேர்ந்த விவசாய சங்கத்துக் காரங்க 4, 5 பேரு வந்தாங்க. 'சாயக்கழிவால ரொம்ப பாதிக்கப் பட்டிருக்கோம். 13 வருஷம் நீதிமன்றத்துல போராடி உத்தரவு வாங்கியும், நொய்யல் ஆத்துல சாயக்கழிவு கலக்கறது தொடருது. நீதிமன்ற அவமதிப்பு தொடர்ந்தப்ப, சாயப்பட்டறை முதலாளிங்க, மாசு கட்டுப்பாட்டு வாரியம் உதவியோட, அந்த வழக்கை தோக்கடிச்சிட்டாங்க. உங்களப் பத்திக் கேள்விப்பட்டு பாக்க வந்தோம்'னு சொன்னாங்க. முதல்ல நான் தயங்கினேன். 'நீங்களும் உதவலைனா, சாகறத தவிர எங்களுக்கு வேற வழியில்லீங்க'னு சொன்னாங்க. ஆடிப்போயிட்டேன். உடனே நான் களத்துல இறங்கினேன். `கீதை’ உபதேசித்த கலாம்

ஆனா, சாயப்பட்டறைங்கள மூடினா, நிறைய தொழிலாளர்களும் பாதிக்கப்படுவாங்க. என்ன செய்யறதுனு தெரியல. உடனே, அப்துல்கலாம் ஐயாகிட்ட பேசினேன். அவரு, பகவத்கீதையில இருந்து சில கருத்துகளை எடுத்துச் சொல்லி, `உனக்கு தகுதி இருந்தும், தப்புகளை கண்டிக்கலைன்னா, நீயும் தப்பு செஞ்சவனாதான் கருதப்படுவ`னு சொன்னாரு. உடனே, சாயப்பட்டறை உரிமையாளர்கள்கிட்ட பேசினேன். மொத்தம் 36 முறை பேச்சுவார்த்தை நடத்தியும், பயனில்லை. அதனால, நீதிமன்றத்தை அணுகி, சட்டப்போராட்டம் நடத்தினேன். பல வீடியோ ஆதாரங்களை திரட்டி, நீதிமன்றத்துல ஒப்படைச்சேன். 2010-ல திருப்பூர் சாயப்பட்டறைங்கள மூடும்படி நீதிமன்றம் உத்தரவு போட்டுச்சு. அதுக்கப்புறம், 742 சாய கம்பெனிங்க, சுத்திகரிக்கப்படாத சாயக் கழிவுநீரை ஆத்துல கலக்கறத நிறுத்திட்டாங்க. பாதிக்கப்பட்ட விவசாயிங்களுக்கு நஷ்டஈடு கேட்டு அப்ப முதல்வரா இருந்த கருணாநிதியை சந்திச்சேன். ரூ.75 கோடி இழப்பீடு வேணுமுன்னு கேட்டோம். சரின்னாரு. மந்திரி சபையைக் கூட்டி ஒப்புதலும் கொடுத்தாரு. ஆனா, அதுக்குள்ள ஆட்சி மாறிடுச்சி. அதுக்கப்புறம் முதல்வரா பொறுப்பேற்ற ஜெயலலிதாவையும் போய் பார்த்தேன். `நீர்நிலையில சாயக்கழிவு தண்ணி கலக்கறதை நிறுத்தினா, பல கோடி உயிரினங்கள் உங்களை வாழ்த்தும். விவசாயிகளுக்கு நஷ்டஈடு கொடுத்தால், நூத்துக்கணக்கான குடும்பங்கள் உங்கள சாகுற வரைக்கும் ஞாபகம் வெச்சிருப்பாங்க'னு அவங்ககிட்ட சொன்னேன். அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம். `உங்கள நம்பி ரூ.75 கோடி கொடுக்க முடியுமா? என்ன பிணையம் கொடுப்பீங்க`னு கேட்டாங்க. அப்ப, அங்கிருந்த அரசு செயலர் சி.வி.சங்கர், `மேடம், கவுண்டர எனக்குத் தெரியும். அவரை நம்பி செயல்படலாம்`னு சொன்னாரு. அதுக்கப்புறம் ரூ.75 கோடி கொடுத்தாங்க. அதை விவசாயிங்களுக்குப் பிரிச்சிக் கொடுத்தோம். இது என்னோட வாழ்க்கையில பெரிய சாதனையா கருதறேன். திருப்பம் ஏற்படுத்திய `நிலக்கடலை’ 2011-வது வருஷம் திருச்செங்கோட்டுல இருந்து கார்ல போய்க்கிட்டிருந்தோம். மகன் சரவணன் கூட இருந்தாரு. நான் படிச்ச ஸ்கூலுக்கு நடந்துபோன பாதையில, நிலக்கடலை சாகுபடி செஞ்சிருந்தாங்க. வண்டிய நிறுத்தி, கடலையை எடுத்துப் பாத்தேன். அப்படியே நொறுங்கிப் போச்சு. போதுமான தண்ணி இல்லாம, பயிர் சரியா விளையில. வண்டியில ஏறி மகன்கிட்ட, `தம்பி, இப்பத்துல இருந்து கம்பெனி பொறுப்பு முழுக்க நீதான் பாத்துக்கனும். நான் தலையிட மாட்டேன். விவசாயிங்களுக்கு ஏதாவது நல்லது செய்யப்போறேன்'னு சொன்னேன்.

ராஜாவுக்கே சோறு போட்டவங்க விவசாயிங்க. ஆனா, இப்ப அரசாங்கத்துக்கிட்ட கையேந்தற நிலைமைதான் இருக்குது. இது நாட்டுக்கு நல்லதா? இதை மாத்தணும். அதே மாதிரி, நமக்குப் படியளக்குற பூமாதேவியை முக்கால் பங்கு மாசுபடுத்திட்டோம். நிலத்துல இருந்து கெடைக்கற தண்ணி, கால்நடைங்ககூட குடிக்க முடியாத நிலையில் இருக்கு. இந்த நிலையை மாத்தணுமுன்னு முயற்சி செஞ்சிக்கிட்டு வர்ரேன். ஏறத்தாழ 5 வருஷமா ரூ.16 கோடி செலவுல நீர் மேலாண்மை, இயற்கை விவசாயம் தொடர்பாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டோம். ஒருமுறை அமெரிக்காவுல ஆர்கன்சா மாநிலத்துல இருக்கற நண்பரைப் பார்க்கப் போனேன். அவரு 11 ஆயிரம் ஏக்கர்ல சாகுபடி செஞ்சிக்கிட்டிருந்தாரு. அவரு தோட்டத்துக்குப் போற வழியில முக்கால் அடி தண்ணீர் நிரம்பியிருந்துச்சு. அது வழியாத்தான் கார் போச்சு. அங்க போனவாட்டி நண்பர்கிட்ட அதுபத்திக் கேட்டேன். 'விவசாயிகளுக்குப் பெரிய எதிரி களைகள்தான். கார் வர்ற வழியில களைகளோட விதை இருந்தா அது டயர்ல ஒட்டிக்கிட்டு நிலத்துக்கு வந்துடும். கொஞ்சம் கொஞ்சமாக பரவிடும். அதனாலதான் தண்ணி வழியாக கார் வர்றமாதிரி செஞ்சிருக்கேன். களைகளோட விதை அந்த தண்ணியிலேயே விழுந்துடும்'னு சொன்னாரு. இது எனக்கு பெரிய பாடமா இருந்தது. அதேமாதிரி, நிலத்துல தண்ணிய சேத்துவைக்காம, பக்கத்துல உயரமான வரப்பு கட்டி, அதில இருந்து வழியிற தண்ணியால நிலமே ஈரமா இருக்கறமாதிரி பாத்துக்கிட்டாரு. அது போதும், தனியா தண்ணி பாய்ச்ச வேண்டாம். இந்த நீர்மேலாண்மைய ராமநாதபுரம் விவசாயிங்ககிட்டதான் கத்துக்கிட்டதா அவரு சொன்னாரு. அதுமட்டுமில்ல, அதிக தண்ணியினால விளைச்சலும் குறையறது தெரிஞ்சது. நம்ம டெல்டா விவசாயிங்க ரெண்டு போகம் நெல்லுக்கு 104 டிஎம்சி பயன்படுத்தறாங்க. ஆனா, 30 டிஎம்சி போதுமாது. உற்பத்தியவும் அதிகரிக்கலாம். நீர் மேலாண்மை, தரமான இடுபொருள்கள் மூலமாக 3 மடங்கு உற்பத்தியை அதிகரிக்கலாம். கண்வலிக் கிழங்கு விதை

2013-ல் கண்வலிக் கிழங்கு விவசாயிகள் என்னை அணுகினாங்க. மருத்துவக் குணம் மிக்க விதை அது. உலகத்துல எங்கேயுமே வணிக முறையில உற்பத்தி செய்யப்படல. ஆனா, கஷ்டப்பட்டு கண்வலிக் கிழங்கு விதையை உற்பத்தி செஞ்ச நம்ம விவசாயிகளுக்கு, போதுமான விலை கிடைக்கலை. இது சம்பந்தமா விவசாயிங்க என்னைத் தேடி வந்தாங்க. விசாரிச்சப்ப, சில கம்பெனிங்க மட்டுமே விவசாயிங்ககிட்ட இருந்து வாங்கி, விஷக்கடி, தசைப்பிடிப்பு, தோல்நோயைக் குணப்படுத்தும் மருந்து தயார் செஞ்சதும் தெரியவந்துச்சு. அந்த முதலாளிகள்கிட்ட பேசினப்ப, விலை விவகாரத்துல தலையிடாதீங்கனு சொன்னாங்க. உடனே, விவசாயிங்கள கூப்பிட்டு, நான் கண்வலிக் கிழங்கு விதையை விலைக்கு கேட்கிறேன்னு சொல்லுங்க. அப்பத்தான், கம்பெனிகாரங்க விலையை ஏத்துவாங்க. கிலோவுக்கு ரூ.1200 கேளுங்கனு சொன்னேன். விவசாயிங்களும் அந்த விலை கேட்டாங்க. ஆனா, கம்பெனிகாரங்க அதை நம்பல. `மிலிட்டரி கவுண்டர்` அதை வாங்க மாட்டாருன்னு சொல்லிட்டாங்க. விவசாயிங்க திரும்பவும் எங்கிட்ட வந்தாங்க. நான் அவங்களுக்கு ரூ.20 லட்சம் கொடுத்து, `மிலிட்டரி கவுண்டரு` ஒப்பந்தம் போட்டுட்டாருனு சொல்லுங்கனு சொன்னேன்.அதுக்கப்புறம்தான் கம்பெனிக்காரங்க நல்ல விலைக்கு கண்வலிக்கிழங்கு விதையை வாங்கினாங்க. இதே மாதிரி, மரவள்ளிக் கிழங்கு பத்தி ஒரு டீமை வெச்சி ஆராய்ச்சி செஞ்சி, அவங்களோட பிரச்சினைக்கு தீர்வுகண்டோம்.2016-ல பண்ருட்டியில முந்திரி சாகுபடி செஞ்ச விவசாயிங்க என்னை அணுகி, விலையும் கிடைக்கல, இருப்பும் வைக்க முடியலனு சொன்னாங்க. அப்ப, குறைந்தபட்ச விலையை ரூ.180 நிர்ணயம் செஞ்சி, அந்த விலைக்கு கீழே முந்திரியை விக்காதீங்க, யாரும் கேட்டா `மேக்` கம்பெனி கேக்கற விலையைக் கொடுக்க ஒப்புக் கொண்டிருப்பதா சொல்லுங்கனு சொன்னேன்.

அதுக்கப்புறம் விலை ஏறி, ரூ.200-க்கு மேலதான் முந்திரி விலைபோச்சு. விவசாயிங்க ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. எங்கப்பா நிலத்துல நான் பாத்ததெல்லாம் இயற்கை விவசாயம்தான். ஆனா, ரசாயன உரத்தால மண் மலடா மாறிடுச்சு. இல்லாத நோயெல்லாம் நமக்கு வந்துடுச்சி. இது தொடர்பாக வேளாண் விஞ்ஞானிகள் கொண்ட ஒரு டீமை உருவாக்கி, 3 வருஷமா இயற்கை முறை விவசாயம் தொடர்பாக ஆராய்ச்சி நடத்தினோம். நவீனத் தொழில்நுட்பமும், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட அடி உரம், மேல் உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளும் கண்டுபிடிச்சி, சோதனை செஞ்சோம். இதுவும் பெரிய பலன் கொடுத்தது. பயோ-டைஜஸ்டர் செப்டிக் டேங்க் ஒருமுறை அப்துல்கலாம் கூப்பிட்டு, `பனிப் பிரதேசத்துல பாதுகாப்புப் பணியில ஈடுபட்டிருக்கற ராணுவ வீரர்களுக்கு கழிப்பறை பிரச்சினை இருக்குது. அங்கு மனிதக்கழிவு எளிதில் மக்காததால பல பிரச்சினைங்க இருக்கு. இதுக்கு ஏதாவது தீர்வுகண்டுபிடி`னு கேட்டுக்கிட்டாரு. இது தொடர்பாக பல ஆராய்ச்சிகள் நடத்தினோம். மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தோட இணைந்து (டிஆர்டிஓ), பயோ-டைஜஸ்டர் முறையிலான செப்டிக் டேங்க் கண்டுபிடிச்சோம். வழக்கமான முறையில, செப்டிக் டேங்குகளை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்குதலால தொழிலாளர்கள் உயிருக்கும் ஆபத்து வருது. பயோ-டைஜஸ்டர் முறையில, பயோடேங்கில் நிரப்பப்பட்டுள்ள பாக்டீரியா நுண்ணுயிரிகள் 99.9 சதவீத கழிவுகளை மக்கச் செய்து, அவற்றை மறு உபயோகத்துக்காக தூய்மையான நீராகவும், மீத்தேன் வாயுவாகவும் மாற்றி வெளியேற்றும்.

இதனால, சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும். பயோ-டைஜஸ்டர் செப்டிக்டேங்கை இயக்க மின்சக்தியோ, எரிபொருளோ தேவைப்படாது. கழிவுகளை சுத்திகரிக்கும் பாக்டீரியாக்களை ஒருமுறை உள்ளே செலுத்தினால் போதும். அவை தானியங்கியா செயல்படத் தொடங்கும். அந்த பாக்டீரியா 6 முதல் 8 மணி நேரத்துக்குள் இரட்டிப்பாக தன்னைப் பெருக்கிக் கொள்ளும். பராமரிப்பதும் மிகவும் எளிது. இன்னொரு பெரிய விஷயம், மனிதக்கழிவை மனிதர்களே அகற்றும் முறை இதனால ஒழிக்கப்படும். இந்த டேங்க்கோட விலையும் குறைவு. `மேக்` நிறுவனம் நிறைய ரயில்களிலும், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களிலும் பயோ-டைஜஸ்டர் செப்டிக் டேங்குகளை நிறுவியுள்ளோம்" என்றார் பெருமித்துடன். செயல்திறன் மிக்க அப்பா... மாணிக்கம் அத்தப்ப கவுண்டரின் மகன் எம்.சரவணன், பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் முடித்துள்ளார். `மேக்` நிறுவனத்தில் தற்போது மேலாண்மை இயக்குநராகப் பொறுப்பு வகிக்கும் இவர் கூறும்போது, "எங்களுக்கு எப்போதும் வழிகாட்டி அப்பாதான். எதையும் கட்டாயப்படுத்த மாட்டார். ஆனால், அவரைப் பார்த்து ஒழுக்கம், நேரம் தவறாமை, கடும் உழைப்பு, தன்னம்பிக்கை என எல்லாவற்றையும் கற்றுக்கொண்டேன். ஊழியர்களை அவர் அணுகும்விதமே அலாதிதான். ஒவ்வொருவரையும் வீட்டில் உள்ளவராகத்தான் கருதுவார். ஒரு கட்டத்தில் நிறுவனப் பொறுப்புகளை முழுமையாக என்னிடம் ஒப்படைத்தார். அதற்குப் பின், நிர்வாகத்தில் தலையிடுவதில்லை. முழு சுதந்திரம் கொடுத்துவிட்டார். அதேசமயம், முக்கிய முடிவெடுப்பதாக இருந்தால், நானே அவரை அணுகி, ஆலோசனை கேட்பேன். இந்த 70 வயதிலும், விவசாயிகள் பிரச்சினை, சமூகப் பிரச்சினைகள் என ஓடிக்கொண்டே இருக்கிறார். ஒரு விஷயத்தைக் கையில் எடுத்துவிட்டார் என்றால், எந்த தடைகள் வந்தாலும், அதை முடிக்காமல் விடமாட்டார். சாதிக்கும் வெறியும், செயல்திறனும்தான் அவரது தனி அடையாளங்கள். அதேசமயம், எங்களுக்கு எப்போதும் `அன்புள்ள அப்பா`தான்" என்றார் நெகிழ்ச்சியுடன்.

0 views0 comments