மக்காத குப்பையை அழிக்க எரியூட்டும் ஆலை


சென்னையை குப்பையில்லா மாநகரமாக்க, எரியூட்டும் ஆலை அமைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து கிடைக்கும் சாம்பலில், 'பேவர் பிளாக்' கற்கள் தயாரித்து விற்பனை செய்ய, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.


சென்னை மாநகராட்சி யின், 15 மண்டலங்களில் இருந்து, தினமும், 4,880 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இவை, பெருங்குடி, கொடுங்கையூர் குப்பை கிடங்குகளில் மலை போல் கொட்டப்பட்டுள்ளன.இந்நிலையில், சென்னையை குப்பையில்லா மாநகரமாக மாற்ற, திடக்கழிவு மேலாண்மை - 2016 விதியை, மாநக ராட்சி செயல்படுத்த துவங்கியுள்ளது.இதன்படி, குடியிருப்புகள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் உருவாகும் குப்பையை அவர்களே தரம் பிரித்து வழங்க, மாநகராட்சி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.மேலும், நாள் ஒன்றுக்கு, 100 கிலோ குப்பைக்கு மேல் உருவானால், அந்த குப்பையை அவர்களே தரம் பிரித்து, மக்கும் குப்பையை பயன்படுத்தி உரம் தயாரிக்க வேண்டும். வீடுகளிலேயே குப்பையை தரம் பிரித்து பெறும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.மக்கும் குப்பை, உரம் தயாரிக்கும் கூடம், பூங்கா, மைதானங்களில், உறை மற்றும் மூங்கில் தொட்டிகள் வாயிலாக உரமாக்கப்பட்டு வருகிறது.அதேபோல், குடிநீர் வாரியத்திடம் பெறப்பட்ட குடிநீர் தொட்டிகளை பயன்படுத்தி, குடியிருப்போர் நலச் சங்கத்துடன் இணைந்து, தெருக்கள்தோறும் மினி உர கிடங்குகள் அமைக்கப்பட்டன. அதன்படி, தினமும், 400 டன் மக்கும் குப்பையில் இருந்து, உரம் தயாரிக்கப்படுகிறது.


இந்நிலையில், மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பையை அழிக்க, மணலி, எம்.ஜி.ஆர்., சாலையில், 65 லட்சம் ரூபாய் செலவில், எரியூட்டும் ஆலை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.இது குறித்து, மாநகராட்சி தலைமை பொறியாளர், மகேசன் கூறியதாவது:சென்னையில் சேகரிக்கப்படும் குப்பையில் இருந்து தினமும், 400 டன் உரம் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.


இந்த உரம், தோட்டக்கலைத் துறைக்கு, 40 டன், வேளாண் துறைக்கு, 20 டன், பொதுமக்களுக்கு, 2 டன் விற்பனை செய்யப்படுகிறது.மேலும், மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்படும் பூங்காக்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. 300 டன் குப்பை மறுசுழற்சி செய்யப்படுகிறது.மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பையை அழிக்க, சமூக பங்களிப்பு நிதியின் கீழ், 65 லட்சம் ரூபாய் செலவில் எரியூட்டும் ஆலை அமைக்கப்பட்டுள்ளது.இந்த ஆலையில், 10 டன் மக்காத குப்பையை, தரம் பிரித்து எரியூட்டப்பட்டு ஆவியாக்கப்படும். இதில் கிடைக்கும் சாம்பலில், சிமென்ட் உள்ளிட்ட கலவைகள் கலந்து, 'பேவர் பிளாக்' கற்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும்.இதற்கு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார் தமிழக ஹிந்து மக்கள் முன்னணி
3 views0 comments